இந்திய மாநிலம் ஹரியானாவில் நிறுத்தி வைக்கப்ப்பட்டிருந்த காருக்குள் ஏறி தவறுதலாக கதவுகளை பூட்டிக் கொண்டு திறக்க முடியாததால் இரட்டைப் பெண் குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குர்கான் அருகிலுள்ள பட்டாடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் கோவிந்த சிங். இவரின் ஐந்து வயது இரட்டைப் பெண் குழந்தைகள் குருகிராம் மாவட்டத்தில் ஜமால்பூருக்கு தாத்தா வீட்டுக்கு தாயுடன் விடுமுறைக்கு சென்றுள்ளனர்.

அங்கு ஹர்ஷிதாவும், ஹர்ஷாவும் பழைய கார் ஒன்றில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் கதவுகள் தானாக மூடிவிட்டதாக கூறப்படுகிறது.

கார் கதவின் தாழ் பழுதாகியிருந்ததால் அதை திறக்க முடியாமல் போராடியுள்ளனர். கார் கதவின் கண்ணாடிகள் ஏற்றிவிடப்பட்டிருந்த நிலையில் அதையும் அவர்களால் திறக்க முடியவில்லை.

இதனிடையே காரினுள் சிக்கிக்கொண்ட குழந்தைகள் 2 பேரும் சத்தமிட்டுள்ளனர். காருக்குள் காற்றோட்டம் இல்லாததோடு, அதிக வெப்பமும் இருந்ததால், சில மணி நேரங்களில் மூச்சுத்திணறி இருவரும் மயங்கியுள்ளனர்.

சிறுமிகளை காணவில்லை என ராணுவ வீரர் பதட்டத்துடன் தேடியுள்ளார். காரினுள் இருக்கலாம் என சென்று பார்த்தபோது குழந்தைகள் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இதையடுத்து மூச்சுபேச்சு இல்லாமல் இருந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சகோதரிகள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரட்டைக் குழந்தைகள் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here