லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை இலங்கை தமிழர்களுக்கு கொடுக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருக்கிறார்.

இலங்கையின் வவுனியாவின் சின்ன டம்பன் மற்றும் புளியங்குளம் பகுதியில் உள்ள ஞானம் நகர் ஆகிய இடங்களில், வீடற்ற தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் கிட்டத்தட்ட 150 வீடுகளை லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா அம்மாள் பெயரில் அமைக்கப்பட்டுள்ள ஞானம் அறக்கட்டளை கட்டித்தருகிறது.

இந்த அறக்கட்டளை மூலம் கட்டப்படும் 150 வீடுகளை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் யாழ்ப்பாணம் நகரில் நடக்கிறது. இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் நேரில் வந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்திடம் கேட்டபோது உடனே மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவது இது தான் முதல் முறை. இந்த விழாவில் ரஜினிகாந்துடன் இணைந்து இலங்கையின் வடக்கு மாநில முதல்வர் வி விக்னேஷ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக்கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி ஆகியோர் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த விழாவிற்கு வருகை தரும் அனைவரும் வருக என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here