கடந்த சில நாட்களாக, டில்லியில், பார்லிமென்டிற்கு அருகே உள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில், தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். தமிழக அரசியல்வாதிகளும் டில்லி வந்து, போராட்டக்காரர்களை சந்தித்து வருகின்றனர். நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர், திடீரென, நேற்று முன்தினம் டில்லி வந்து விவசாயிகளைச் சந்தித்தனர்.

முன்னதாக, ‘மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்து விவசாயிகள் நிலைமையை எடுத்துக் கூறுவோம்’ என, டில்லியில் உள்ள தமிழ் மீடியாக்களிடம் பேட்டி அளித்தனர். இதன் பின், விவசாயிகள் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த நடிகர்கள், பேட்டியளித்தனர். நிதி அமைச்சரைசந்தித்து விவசாயிகள் பிரச்னை தொடர்பாக மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து, நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது

எந்தவிதமான முன் அனுமதியும் இல்லாமல், நிதி அமைச்சர் வீட்டிற்கு வந்த நடிகர்கள்,அவரை சந்திக்க வேண்டும் என்றனர். ஆனால், முன் அனுமதி பெற்றால் மட்டுமே சந்திக்க முடியும் என, உறுதியாக கூறி விட்டோம். இதன்பின், நடிகர் சங்கம் என கூறி, ஒரு, ‘விசிட்டிங் கார்டை’ கொடுத்து அனுப்பினர். மேலும், டில்லியில் உள்ள ஒரு பெரிய ரியல் எஸ்டேட் பிரமுகரும், இவர்களுக்கு, நிதி அமைச்சரை சந்திக்க, ஏற்பாடு செய்து கொடுக்கும் படி கூறினார்.

அமைச்சர் ஜெட்லியோ, மும்பை கிளம்பும் அவசரத்தில் இருந்தார். ஏதோ, நடிகர் சங்க பிரச்னை என கருதி, சந்திக்க அவர்களை உள்ளே அழைத்தார். 10 பேர் உள்ளே வந்தனர்; ஒரு மனுவைக் கொடுத்தனர். வந்தவர்களில் ஒருவர், ‘புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என கேட்க, அமைச்சரும் சரி என்றார். அவர்கள் கொடுத்த மனுவில், ‘இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டு இருந்தது. மனுவிலும் அதைப் பற்றி குறிப்பிடவில்லை.
வந்தவர்களை உட்காரக் கூட சொல்ல வில்லை. இந்த சந்திப்பு ஒரு நிமிடம்தான் நடந்தது. மேலும், தன்னை சந்தித்தவர்கள் நடிகர்கள் என அமைச்சருக்கே தெரியாது.

நாங்கள் விசாரித்தபோது, இவர்கள் நடிக்க விருக்கும் படத்திற்காக படப்பிடிப்பு நடத்த, ஒரு வீடு பிடிக்கத்தான் டில்லி வந்துள்ளனர் என, ரியல் எஸ்டேட் பிரமுகர் தெரிவித்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நிலைமை இப்படியிருக்க, ‘நிதி அமைச்சரைப் பார்த்து, தமிழக விவசாயிகள் தொடர்பான மனு கொடுத்து விட்டோம்’ என, நடிகர்கள் பேட்டி கொடுத்தது, வெறும் நடிப்புத் தானா என, விவசாயிகள் மத்தியில் குமுறல் எழுந்துள்ளது.

இந்த சந்திப்பின்போது, தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, நிதி அமைச்சரிடம், அவர்கள் எதுவும் பேசவே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here