இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் இந்த தொடரில் விளையாட அனுமதி தகுதி பெறும். அதன்படி வங்காள தேச அணியும் இந்த தொடரில் விளையாட தகுதி பெற்றது.

வங்காள தேசம் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்திருந்தது. அந்த அணியுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம்பிடித்திருந்தது. இரண்டு அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் தலைசிறந்த மூன்று அணிகளுடன் மோதி எப்படி வங்காள தேச அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வங்காள தேசம் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது போட்டியில் வங்காள தேசம் முதலில் பேட்டிங் செய்து 182 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆஸ்திரேலியா 16 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. ஐசிசி விதிப்படி 20 ஓவர்கள் முடிந்திருந்தால் மட்டுமே டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்படும். இதனால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஆகவே, இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதற்கிடையே நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் கைவிடப்பட, நியூசிலாந்தை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது வங்காள தேசம்.

அதன்படி வங்காள தேசம் 3 புள்ளிகளும், ஆஸ்திரேலியா இரண்டு புள்ளிகளும் பெற்றிருந்தது. இங்கிலாந்து அணி நான்கு புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும். இல்லையெனில் வங்காள தேசம் அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்ற நிலையில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

இதில் ஆஸ்திரேலியா அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக வங்காள தேசம் ஐ.சி.சி. நடத்தும் மிகப்பெரிய தொடரான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஐ.சி.சி. தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது மிகப்பெரிய சாதனை என்று வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா கூறியுள்ளார்.

அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து மோர்தசா கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறியது எங்களுடைய கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய விஷயம். எங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஆனால், நாங்கள் கோப்பையை வெல்லும் நிலைக்குச் செல்வோம் என்று நினைக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.

முன்னணியில் இருக்கும் 8 அணிகள்தான் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. எனவே, உலகக்கோப்பையை விட இது சவால் ஆனது. ஆகையால், அரையிறுதியை எட்டியிருப்பதே எங்களுக்கு மிகப்பெரிய சாதனை. எங்களுடைய ஆட்டம் மிகச் சிறந்த வகையில் செல்வதற்கு இது ஒரு வெகுமதி’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here