இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நோக்கி இந்திய அணியை முழு அளவில் தயார்படுத்த டோனி, யுவராஜ்சிங் (தலா 35 வயது) ஆகியோரின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்த முடிவை அணித் தேர்வு குழுவும், நிர்வாகமும் எடுக்க வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணமாகும்.

அடுத்த சில ஆண்டுகளில் இவர்களின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? அணியில் இருவருக்குமே இடம் இருக்கிறதா, அல்லது ஒருவருக்கு மட்டும் தானா? இதற்கான மதிப்பீட்டை ஒரு ஆண்டு காலத்தில் செய்யப்போகிறோமா அல்லது 6 மாத காலத்தில் செய்யப் போகிறோமா? அதற்கு முன்பாக திறமையான புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்போகிறோமா? அது பற்றி எல்லாம் முடிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு வலுவான இந்திய அணி அனுப்பப்படுகிறது. இதில் குறைந்தது ஆடும் லெவன் அணியில் வேறு சிலருக்கு வாய்ப்பு அளித்து பரிசோதனை முயற்சியை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதை செய்யவில்லை என்றால், ‘நாம் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இவர்கள் இருவர் மட்டுமே நம்மிடம் இருக்கிறார்கள்’ என்று கூறும் நிலைமை ஏற்பட்டு விடும்.

அது சரியான அணுகுமுறையாகவும் இருக்காது. ‘நிறைய பேருக்கு வாய்ப்பு அளித்து பார்த்தோம். எதுவும் கைகொடுக்கவில்லை. யுவராஜ்சிங், டோனி தான் அந்த வரிசைக்கு பொருத்தமானவர்களாக தெரிகிறார்கள். தொடர்ந்து நன்றாகவும் ஆடுகிறார்கள்’ என்று சொல்லும் நிலைமையை உருவாக்கினால் தான், யாரும் தேர்வு குழு குறித்து கேள்வி எழுப்பமாட்டார்கள்.

இவ்வாறு டிராவிட் கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்திய ஜூனியர் மற்றும் இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தத்தை மேலும் இரண்டு ஆண்டுக்கு நீட்டிக்க கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here