இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியில் விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 265 ரன் எடுத்தது. கேப்டன் மிதாலி ராஜ் சதம் (109 ரன்) அடித்தார்.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து 25.3 ஓவரில் 79 ரன்னுக்கு சுருண்டது. இதனால் இந்தியா 186 ரன் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்தியா 7 ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வி பெற்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தது.

அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு, விளையாட்டு வீரர்கள், நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துக்கள். மிதாலி ராஜ், வேதா, ராஜேஸ்வரி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கவுதம் காம்பீர்:- அரையிறுதியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். எங்களது அனைவரின் ஆதரவும் உங்களுக்கு இருக்கும்.

அஸ்வின்:- இந்திய மகளிர் அணி கம்பீரமாக வெற்றி பெற்று இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக முழு திறமையுடன் விளையாடினார்கள். இந்திய வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள்.

ஹர்பஜன்சிங்:- அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இந்திய அணியின் நட்சத்திர செயல் திறனுக்கு பாராட்டுக்கள்.

வி.வி.எஸ். லட்சுமணன்:- இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்தை சுருட்டிவிட்டனர்.

முகமது கயூப்:- இந்திய மகளிர் அணியால் பெருமை அடைகிறோம்.

இதேபோல் ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா, கிரிக்கெட் வாரிய செயல் தலைவர் சி.கே.கண்ணா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் வருகிற 20-ந் தேதி மோதுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here