பொதுவாக இரண்டு விஷயங்களை எளிதாக மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யலாம். ஒன்று நமக்கு பிடித்த புத்தகங்கள், மற்றொன்று நல்ல திரைப்படம். காலம் தாண்டி பேசப்படுகின்ற படங்களை மொழிகள் சாராது உங்களுக்கு எடுத்துவர விழைகிறோம். இந்தப்படங்களை கிளாசிக் திரைப்படம் தொடரின் மூலம் உங்களுக்கு கொண்டு வருகிறது மீடியா டாக்கீஸ்.

கிளாசிக் திரைப்படம் – ஒரு பார்வை தொடரில் முதல் படமாக ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் (The Shawshank Redemption) படத்தை பற்றி பார்ப்போம். இந்த படத்தை சிலர் பார்த்திருக்கலாம், பலர் இன்னும் பார்க்காமலிருக்கலாம். ஏற்கனவே பார்த்தவர்களுக்கு இந்த கட்டுரை படத்தை மீண்டும் பார்க்க தூண்டும் என்ற நம்பிக்கையில் கட்டுரையை தொடங்குவோம்!!

இயக்குனர் : ஃப்ராங்க் டராபொன்ட் (Frank Darabont)

நடிகர்கள் : மோர்கன் ஃபிரீமேன் (Morgan Freeman) மற்றும் டிம் ராபின்ஸ் (Tim Robbins)

ஒளிப்பதிவு இயக்குனர் : ரோஜர் டிக்கின்ஸ் (Roger Deakins)

இசை : தாமஸ் நியூமன்

ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்

ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் 1994 ஆம் ஆண்டு வெளியானது. புகழ்பெற்ற எழுத்தாளரான ஸ்டிபன் கிங் எழுதிய “ரீட்டா ஹேவொர்த் அண்ட் ஷஷாங்க் ரிடெம்ப்சன் (Rita Hayworth and Shawshank Redemption) எனும் சிறு நாவலை அடிப்படையாகக் கொண்டது இப்படம்.

ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் பற்றிய வீடியோவை பார்க்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

கதை சுருக்கம்

இந்த படத்தின் கதை நிரபராதியான ஒருவன் கைதியாக சிறையில் அடைக்கப்படுகிறான். பின்னாளில் அவன் சிறையிலிருந்து எவ்வாறு தப்பித்து தனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்து கொள்கிறான் என்பதே.

இந்த படத்தின் மையக்கருத்தை ஒரு சில வசனங்களிலேயே சொல்லி இருப்பார், இயக்குனர். Get Busy Living, Or Get Busy Dying. வாழ்வையும் சரி சாவையும் சரி நம்மால் தேர்ந்து எடுக்க முடியும்!! நாம் எதை தேர்ந்து எடுக்குறோம் என்பது நம் கையிலே என்பதை ஆண்டி, ரெட் மற்றும் ப்ரூக்ஸ் என்ற மூன்று கதாபாத்திரங்களின் வாயிலாக கூறியிருப்பார் இயக்குனர் ஃப்ராங்க் டராபொன்ட்.

இப்படி மேலோட்டமாக இந்த கதை சுருக்கத்தை சொன்னாலும், இதில் வரும் காட்சிகளும், அதில் உள்ள சம்பவங்களும் கடத்தும் உணர்வில்தான் படத்தின் உயிர் உள்ளது.

இந்த படத்தின் மூலம் குற்றமே செய்யாத ஒருவன் தண்டனை பெறுவது என்பது எத்தனை கொடுமை என்பதை நம்மால் உணர முடியும். அப்படி தண்டனைக்குள்ளானவன் இழந்ததை திரும்பவே பெற முடியாது என்றிருக்கும் காலத்தையும், வலியையும் பதிவு செய்திருப்பார்கள்.

அப்படியான துன்பத்திலும் விடாமுயற்சி இருந்தால் ஒருவன் தனது வாழ்க்கையை அமைக்க முடியும் என Get Busy Living என்ற பொருளுக்கான அர்த்தத்தை Andy’யின் வழியே சொல்லி இருப்பார் இயக்குனர்.

முழு வாழ்க்கையும் சிறையிலேயே வாழ்ந்து கடைசி காலத்தில் வெளியில் வந்தால் வாழ வழி இருக்காது என உயிரை மாய்த்துகொள்ள ஒருவன் முடிவெடுத்து, Get Busy Dying என்பதற்கு உதாரணமாகிறார் புரூக் ஹால்டன்.

சிறைப்பட்டிருந்தாலும் தன்னுடைய தண்டனை காலத்திற்குள் ஒரு மனிதன் திருந்தி வாழ முடியும். அப்படி திருந்தி வாழக்கூடியவன் வெளியே வரும்போது அவனுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ முடியுமா என்ற குழப்பம் நேரிடும். அந்த குழப்பத்திலிருந்து வெளிவந்து தெளிவாகி வாழ முயற்சி செய்யலாம் என்பதை மோர்கன் ஃபிரீமேன் நடித்திருக்கும் ரெட் கதாபாத்திரத்தின் மூலம் நமக்கு உணர்த்தி இருப்பார்கள்.

ஆண்டியும் ரெட்டும் நட்பாகும் காட்சி, ஆண்டி தனது புத்திசாலித்தனத்தால் அவனது நண்பர்களுக்கு மது வாங்கிக்குடுக்கும் காட்சி, ரெட் ஒவ்வொரு முறை பெயில் கிடைக்கும் என காத்திருக்கும் தருணங்களாகட்டும், அவருக்கு பெயில் கிடைத்து தனது நண்பன் ஆண்டியை பார்க்க செல்வது,புரூக் ஹால்டன் அவர் வளர்க்கும் ஜேக் எனப் பெயரிடப்பட்ட காக்காவை விடுவிக்கும் காட்சி என பல சிறப்பான காட்சிகளை கொண்டிருக்கிறது இப்படம்.

ஆண்டி என்ற கதாபாத்திரம் சிறைக்குள் இருந்தாலும் அந்த கதாபாத்திரம் தனக்குள் இருக்கும் உலகை ரசிப்பதாக இருக்கும். ஒரு காட்சியில் சிறையில் இருக்கும் இசைத்தட்டை ஒலிக்க விட்டு மெய்மறந்து ரசிக்கும் காட்சியில் அந்த கதாபாத்திரத்தின் கனவு உலகை நாமும் உணர முடியும்

சிறப்பான ஒளிப்பதிவு செய்து நம்மை மேலும் அசர வைத்திருப்பார் ஒளிப்பதிவாளர் ரோஜர் டிக்கின்ஸ். ஒளிப்பதிவு துறையில் அவர் மிகப்பெரும் ஆளுமை என்பதற்கு ரோஜர் டிக்கின்ஸின் மற்ற படைப்புகளான No Country for Old Men, SKYFALL, 1917 மற்றும் A Beautiful Mind போன்ற படங்களின் ஒளிப்பதிவே சான்று.

“Hope is a dangerous thing. Drive a man insane”

Ellis “Red” Redding

இப்படி பல சிறப்பு அம்சங்கள் கொண்ட இப்படத்தை உங்களுக்கு நினைவூட்டி அதை நீங்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரைக்கான நோக்கம். மீண்டும் ஒரு நல்ல படத்துடன் சந்திப்போம், நன்றி!!

Share:

administrator